Sunday, August 5, 2012

பஸோட்டி... ட்ரெயினோட்டி... லாரியோட்டி... ஸ்கூட்டரோட்டி...

கல்கி 5-8-12 இதழை மாக்கவி பாரதி நகர் நூலகத்தில் தற்செயலாகப் புரட்டினேன்...தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராசனின் தொடர் ஒன்று வெளியாகி இருந்தது...அதில் அவர் எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான தொடர்புகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்..

ஒரு கோப்பில் இவர் “ கார் ஓட்டி” என்று இருந்ததை
“காரோட்டி” என்று மாற்றியதாகவும் அதற்கு எம்.ஜி.ஆர். கார் ஓட்டி என்றிருந்தால் என்ன கேட்டிருக்கி
றார் . அதற்கு அய்யா தமிழ்வேந்தர் என்ன சொன்னாராம் தெரியுமா...? நான் உங்களது “படகோட்டி” படம் பார்த்தவன் என்றாராம். இதையே சில ஆண்டுகளுக்கு முன்பு குமுதமோ...குமுதம் ஜங்கஷன் இதழிலோ இன்னும் விளக்கமாகச் சொல்லி இருந்தார்.

அதாவது ...car என்பது ஆங்கிலச் சொல் ...ஓட்டி என்பது தமிழ்ச்சொல் ..இரண்டும் எப்படி ஒன்றுசேரும் (புணரும்) என்று எம்.ஜி.ஆர். கேட்டதாகவும் ...அதற்கு நம் தமிழ்வேந்தர் அவர்கள்...நீங்கள்தானய்யா எனக்குக் குரு...நீங்கள் “ படகோட்டி”என்று பெயர் வைத்தீர்களே...அதை வைத்துத்தான் நான் “காரோட்டி” வைத்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது...எம்.ஜி.ஆருக்கு இருந்த மொழி அறிவுகூட தமிழ்வேந்தருக்கு இல்லை என்று எடுத்துக்கொள்வதா...? “ஔவை”க்கும் தெரியும்தான் ... காரோட்டி என்பது சரியல்ல என்பது ...என்ன செய்வது ..? புகழ்ச்சிக்கு மயங்காதார் யாருமில்லை என்பதைப் புரிந்துகொண்ட மனிதர் அவர். எம்.ஜி.ஆருக்கு சரியாக ஜால்ரா அடித்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

இல்லையென்றால் அப்படிச் சொல்லியிருப்பாரா? படகோட்டி என்பதைப் போல் இயல்பாக காரோட்டி உச்சரிப்பு அமைந்திருப்பதற்குக் காரணம் ... “கார்” என்பது தமிழ்ச்சொல்லாகவும் இருப்பதுதான்.
கார்காலம்...கார்மேகம்...கார்குழல்...என்பதைப்போல் காரோட்டியும் இயல்பாக ஒலிக்கிறது. அதற்காக எம்.ஜி.ஆரை அப்படி ஏமற்றலாமா?

அப்படியே ஒரு சட்டம் போட்டு....

பஸோட்டி...
ட்ரெயினோட்டி...
லாரியோட்டி...
ஸ்கூட்டரோட்டி...

என்றெல்லாம் மாற்றிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ...

கலைச்சொல் உருவாக்கத்திற்கு அளப்பரிய பங்காக இருந்திருக்கும்!

இவரைப் போன்றவர்களால்தான் உயர்ந்த பதவிகளுக்கு வரமுடிகிறது...என்ன செய்வது...தமிழின் ...தமிழனின் தலைவிதி(?)...அதான் தமிழும் ...தமிழ்ப்பல்கலைக் கழகமும் வாழோ...வாழ் என்று வாழ்கிறது.!

வருத்தத்துடனும்
வேதனையுடனும்
இத்தகவலை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்..அவ்வளவே!

Saturday, July 28, 2012


எழுத்தாளர்  எம்.வி.வெங்கட்ராம் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் அவரது படைப்புகள்...

       1920-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தவர்  எம்.வி.வி. இவருடைய பெற்றோர் வீரைய்யர் – சீதை அம்மாள். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம் – சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்தெடுத்துக்கொண்டனர். தொடக்கத்தில் பட்டுச்சரிகை வணிகம் செய்துகொண்டு மணிக்கொடி இதழில் சிறுகதைகள் எழுதினார். 16ஆவது வயதில் முதன்முதலில் இவர் எழுதிய “சிட்டுக் குருவி” எனும் சிறுகதை மணிக்கொடி இதழில் வெளியானது. “விக்ரஹவிநாசன் ” எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.  1941 – 1946 காலகட்டத்தில் கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார். 1965 – 1970 காலகட்டத்தில்  தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார்.  ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். 1948 இல் “தேனீ ” என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார்.   தேனீ இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை வெளியி்ட்டிருக்கிறார். 

     நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபக்தர்களைப் பற்றிய பள்ளி மாணவர்களுக்கான அறுபது சிறுநூல்களை பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்திற்காக எழுதியுள்ளார்.  இவருடைய மனைவி ருக்மணி அம்மாள். நான்கு மகன்கள் மூன்று மகள்கள். 2000ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் இவர் காலமானார்.


புதினங்கள்

நித்திய கன்னி
இருட்டு
உயிரின் யாத்திரை
அரும்பு
ஒரு பெண் போராடுகிறாள்
வேள்வித் தீ

சிறுகதைத் தொகுதிகள்

மாளிகை வாசம்
உறங்காத கண்கள்
மோகினி
குயிலி
இனி புதிதாய்
நானும் உன்னோடு
அகலிகை முதலிய அழகிகள்
எம். வி. வெங்கட்ராம் கதைகள்
முத்துக்கள் பத்து
பனிமுடி மீது கண்ணகி.

வேள்வித் தீ நாவல் குறித்த என்னுடைய ஆய்வுரையை விரைவில் இவ்வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட இருக்கிறேன்...

தோழமையுடன் 
யாழினி முனுசாமி

கரிகால் சோழனின் பேரன் தமிழ் ஈழம் எனும் முகநூல் நண்பர் நல்ல நல்ல செய்திகளை வெளியிடுகிறார்...அவர் இன்று வெளியிட்ட செய்தி கீழே...


கி.பி.18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்க சாதி வெறியர்களால் விதிக்க பட்ட வரிகளை பாருங்கள் இதை விட கேவலம் எது

திருமணம் ஆன தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள பெண்கள் தாலியை தங்கத்தில் செய்து அணியக் கூடாது. தங்கத்திற்கு பதிலாக பனை ஓலையையே பயன்படுத்த வேண்டும்.

இச்சாதியைச் சேர்ந்த பெண்கள் எக்காரணம் கொண்டும் கல்வியறிவு பெறுவதற்காக படிக்கக் கூடாது.

இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துச் சுமந்து செல்லக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.

இந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை ஆடை அணிந்து மறைக்கக் கூடாது. இடுப்புக்கு கீழே, கால் முட்டிக்கு மேலே முண்டு போன்ற ஒருவித ஆடை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். மார்பகங்களை அவர்கள் திறந்து காட்டியபடி செல்வது மரியாதை செலுத்துவதாக ஆதிக்க ஜாதியினரால் கருதப்பட்டது.

இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களைத் தலையில் சுமந்து செல்லும் போது, எதிரே மேல் சாதியினர் வந்தால் ஒதுங்கி, நின்று நிதானித்துதான் செல்ல வேண்டும்.

16 முதல் 35 வயது வரையிலான பெண்கள் கட்டாயமாக முலை வரி (மார்பக வரி) செலுத்த வேண்டும். மீறினால், கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி வைத்து அடித்து உதைப்பார்கள். சில நேரங்களில், முலை வரி செலுத்தாத பெண்களை, அவர்களது கூந்தலில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிந்த நிலையில் பல நாட்களாக நிற்க வைத்தனர். இந்த தண்டனைக்கு ஆளான பெண்கள் பலர் இறந்து போவது நிச்சயம். இதுபோக, முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டது.
 ·  ·  · 38 minutes ago ·